பாம்பு கடித்து ஆசிரியர் இறந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி
பாம்பு கடித்து ஆசிரியர் இறந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் உத்தப்புரத்தைச் சேர்ந்த பாலமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் தந்தை பாலகணபதி. ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2010-ம் ஆண்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்தார். இதனால் வனவிலங்குகள் சட்டப்படி இழப்பீடு கேட்டு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த தனி நீதிபதி, 2010-ம் ஆண்டில் நடந்த சம்பவத்துக்கு இழப்பீடு கேட்டு 2022-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தது ஏற்புடையதல்ல. மேலும் என் தந்தை பென்ஷன் பெற்று வந்ததால் இழப்பீடு கோரிக்கை ஏற்புடையதல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அதை ரத்து செய்து இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தாமதமாக வழக்கு தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. எனவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.