நிலக்கடலையில் மண் அணைக்க ஏற்ற காலம்


நிலக்கடலையில் மண் அணைக்க ஏற்ற காலம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தைப்பட்டதில் விதைக்கப்பட்ட நிலக்கடலையில் மண் அணைக்க இது ஏற்ற காலம் என்று மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

தைப்பட்டதில் விதைக்கப்பட்ட நிலக்கடலையில் மண் அணைக்க இது ஏற்ற காலம் என்று மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

40-45 நாட்களுக்குள்....

தைப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக்கடலையில் தற்போது மண் அணைக்க ஏற்ற காலமாகும். இரண்டாவது, கைக்களை எடுத்த பின்பு மண் அணைக்க வேண்டும். விதைத்த 40-45 நாட்களுக்குள் மண் அணைக்க வேண்டும்.

ஏனெனில் இது மண்ணில் விழுதுகள் ஊடுருவிச் செல்ல உதவுகிறது மற்றும் அதிக காய்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறது..விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு மண்ணில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.

ஜிப்சம் பயன்பாடு

காய் மற்றும் விதை வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமாக தேவைப்படுகிறது. நிலக்கடலையில் அதிக மகசூல் மற்றும் கரம் பெற நல்ல ஊட்டச்சத்து தேவை. கால்சியம் குறைபாட்டினால் காய்கள் அழுகல் மற்றும் "பாப்ஸ்" என்று அழைக்கப்படும் நிரப்பப்படாத பொக்கு காய்கள் அதிக அளவில் உண்டாகிறது.

அதிக எடையுடன் கூடிய தடிமனான காய்களின் வளர்ச்சிக்கு கால்சியம் உதவுகிறது.இதற்கு ஜிப்சம் பயன்பாடு மிகவும் முக்கியமானது. இதில் கால்சியம் மற்றும் சல்பர் உள்ளது. சல்பர் பருப்பில் உள்ள எண்ணெய் உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. எனவே ஜிப்சம் நிலக்கடலையில் பூக்க ஆரம்பிக்கும் தருணத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம்

ஜிப்சத்தில் உள்ள கால்சியத்தின் காரணமாக நிலக்கடலை பூக்களில் இருந்து விழுதுகள் மண்ணின் வழியாக எளிதாக ஊடுருவிச் செல்லும். ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் விதைத்த 40, 45-வது நாளில் இட்டு, மண் அணைக்க வேண்டும்.

பாசனப் பயிருக்கு ஒரு எக்டருக்கு 40,45-வது நாளில் 400 கிலோ வீதம் ஜிப்சம் இடவேண்டும்.மானாவாரிப் பயிருக்கும் 40,75-வது நாளில் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து ஜிப்சம் இடவேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு அணைக்க வேண்டும்.

பாதிப்புகள் குறையும்

கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனை தரும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை ரசாயன உரங்களுடன் அடியுரமாக இடுவதால் மானாவாரி மற்றும் இறவைப்பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்தி மெலடி மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புக்களைக் குறைக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story