22 ஆண்டுகளாக காப்பீட்டு தொகை வழங்காமல் அலைகழிப்பு


22 ஆண்டுகளாக காப்பீட்டு தொகை வழங்காமல் அலைகழிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு 22 ஆண்டுகளாக காப்பீட்டு தொகை வழங்காமல் அலைகழிக்கப்பட்டதால் கோர்ட்டு உத்தரவின் பேரில் காப்பீட்டு நிறுவனத்தில் பொருட்களை ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு 22 ஆண்டுகளாக காப்பீட்டு தொகை வழங்காமல் அலைகழிக்கப்பட்டதால் கோர்ட்டு உத்தரவின் பேரில் காப்பீட்டு நிறுவனத்தில் பொருட்களை ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 62). இவர் கடந்த 2001-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவருக்கு, ஓசூரில் இயங்கி வரும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுத்தொகை ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவில்லை என தெரிகிறது. இதனை எதிர்த்து அவர் ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆனாலும் அவருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கிருஷ்ணப்பாவுக்கு, கடந்த 2018-ம் ஆண்டு காப்பீட்டு தொகையை வழங்காமல் அலைகழிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள அவர் ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

பொருட்கள் ஜப்தி

தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் காப்பீட்டு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட கிருஷ்ணப்பாவின் வக்கீல்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் அந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள கணினிகள், மேஜைகள், நாற்காலிகள், பீரோக்கள் மற்றும் மின்விசிறிகள் ஆகியவற்றை ஜப்தி செய்தனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தினர், ஜப்திக்கு சென்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டு பணத்தை தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story