சின்னவெங்காயம் மழையால் அழுகி சேதம்


சின்னவெங்காயம் மழையால் அழுகி சேதம்
x
திருப்பூர்


பெதப்பம்பட்டி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்ட நிலையில் மழையால் அழுகி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சின்னவெங்காயம்

பெதப்பம்பட்டி, குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் அமைத்து காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் விலை ஏற்ற இறக்கங்களை பொருத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வெங்காயம் விதைமூலமும், முழுவெங்காயமாகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்

மழையால் சேதம்

சின்ன வெங்காய சாகுபடி குறித்து விவசாயி கூறியதாவது:-

குடிமங்கலம் பகுதியில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 600 கிலோ வெங்காய விதைகள் தேவைப்படும். உழவு, களை எடுத்தால், உரமிடுதல், மருந்து தெளித்தல் எனஏக்கருக்கு 1 லட்சம் வரை செலவாகிறது. சின்ன வெங்காயத்தை 4 முதல் 5 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்தும், விலை அதிகமான நேரங்களில் விற்பனை செய்ய முடிகிறது. சின்னவெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் 2,3 நாட்கள் வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் குடிமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராகி இருந்த விளைநிலங்களில் மழைநீர் தேங்கி சின்ன வெங்காயம் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தை உடனடியாக அறுவடை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் அழுகிய நிலையிலும் முளைத்தும் காணப்படுகிறது. சின்ன வெங்காயம் அழுகி சேதமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story