கோடைகால கலைப்பயிற்சி நிறைவு விழா
விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் கோடைகால கலைப்பயிற்சி நிறைவு விழா நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கடந்த 10 நாட்களாக கோடைகால கலைப்பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், கலை பண்பாட்டுத்துறையின் தஞ்சாவூர் மண்டலம் சார்பில், சவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில் குரலிசை, பரதம், ஓவியம், சிலம்பம் ஆகிய பிரிவுகளில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இதனை தொடர்ந்து இப்பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சவகர் சிறுவர் மன்ற மாவட்ட திட்ட அலுவலர் ராஜன் பிரகாசன், ரோட்டரி சங்க தலைவர் நம்மாழ்வார், முன்னாள் தலைவர் பாலகுருநாதன், இசைப்பள்ளி ஆசிரியர்கள் முருகையன், வியாசர்பாடி கோதண்டராமன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் இசைப்பள்ளி ஆசிரியர்கள் மஞ்சம்மாள், ஹேமா மஞ்சுளா, மார்க்கப்பந்து, குணசேகரன் மற்றும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.