ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் நேற்று தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் நேற்று தொடங்கியது.
கோடை திருநாள்
பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
மூலஸ்தான சேவை கிடையாது
14-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 15- ந் தேதி முதல் 19-ந்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது.
15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இரவு 8.45 மணிமுதல் இரவு 9.45 மணிவரை வீணை ஏகாந்த சேவை நடைபெறும். வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், இரவு 8 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.
உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளி பின் மாலை 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
உள்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.45 மணி முதல் 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 19-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.