நெய்தல் கோடை விழா
கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் கோடை விழா வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கோடை விழா
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஒவ்வொரு ஆண்டும் நெய்தல் கோடை விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நெய்தல் கோடை விழா வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடக்கிறது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்குகிறார். இந்த கோடை விழாவில் 3 நாட்களும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அனைத்து துறைகள் மூலமாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புத்தக கண்காட்சி அரங்குகளுடன் கூடிய அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
ஏற்பாடுகள் தீவிரம்
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பரதம், நடனம், நாடகம், சிலம்பாட்டம், தப்பாட்டம் மற்றும் பட்டிமன்றம், பிரபலங்களின் இன்னிசை நிகழ்ச்சிகள், பல்வேறு கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், காளையாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதுதவிர சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் கோடை விழா நடைபெறும் 3 நாட்களும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.