கோழிப்பண்ணைகளில் கோடைகால தீவன மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோழிப்பண்ணைகளில் கோடைகால தீவன மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை), நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) தலா 2 மி.மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று மணிக்கு முறையே 8 கி.மீ., 6 கி.மீ., 6 கி.மீ.வேகத்தில் தெற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும், அதிகபட்சமாக 70 சதவீதமாகவும் இருக்கும்.
முட்டை ஓடு குறைபாடு
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் கோழிப்பண்ணையாளர்கள் தொடர்ந்து கோடைகால பராமரிப்பு முறைகளை தீவிர முறையில் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக தீவன எடுப்பு மிகவும் குறைந்து உள்ளது. அதன் காரணமாக முட்டை உற்பத்தியும், முட்டையின் எடையும் மிகவும் குறைந்து உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, குறைந்த வெப்ப அளவுகள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன.
எனவே அடுத்து வரும் நாட்களில் கோடை காலத்திற்கான தீவன மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். தீவனத்தில் அமீனோ அமிலங்கள் குறிப்பாக மித்தியோனின் மற்றும் லைசின் சேர்த்தல், தாவர எண்ணெய் கொண்டு எரிசக்தியின் அளவை உயர்த்துதல், எலக்ட்ரோலைட்ஸ் உப்புக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றை கலந்து தர வேண்டும்.
அதிக அளவில் முட்டை ஓடு குறைபாடுகளை களைய, சோடா உப்பை டன்னிற்கு 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை சேர்த்து வர வேண்டும். அயற்சி ஏற்படா வண்ணம், தீவனத்தை காலை 5 மணி முதல் 10 மணிக்குள்ளும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்குள்ளும் மட்டுமே தர வேண்டும். இதனால் வெப்ப அதிர்ச்சியில் இருந்து கோழிகளை காப்பாற்றலாம். காலை முதல் இரவு வரை குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.