கோடைகால திரவ உணவு பொருள் விற்பனை: உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைவியாபாரிகள் பின்பற்ற அறிவுறுத்தல்
கோடைகாலங்களில் திரவ உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
கோடைகாலங்களில் திரவ உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திரவ உணவுகள்
தற்பொழுது கோடை காலம் தொடங்கி உள்ளதால், பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகும்.இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, கோடை கால உணவினை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதன்படி அனைத்து உணவு வியாபாரிகளும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே, உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும். பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும், உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை, மஞ்சநீர்காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.
ஐஸ் கட்டி
திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது.
கம்மங்கூழ் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும். திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. குளிரூட்ட, உணவுத் தர "ஐஸ் கட்டியைப்" பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி "நீல நிறத்திலும்" இருக்கும். ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து, ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை வைக்கோல், சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது. குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும்.
புகார்
அதே போன்று நுகர்வோர் கடையில் திரவ உணவு பொருட்களை வாங்கும் போது, கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கெட்டு போகும் நிலையில் பொருட்கள் இருந்தால் அதனை தவிர்க்க வேண்டும்.திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும். நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.