கோடைநெல் அறுவடை பணிகள் தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேலும் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல்சாகுபடியும் நடைபெறும். இதற்காக ஒவ்வொருஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன்மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது.
கோடை நெல் சாகுபடி
இந்த நிலையில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. மோட்டார்பம்புசெட் உள்ள பகுதிகளில் இந்த சாகுபடி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கோடை நெல் சாகுபடி 70 ஆயிரம் ஏக்கர் வரை நடைபெற்றது. இதில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்திரங்கள் மூலம் இந்த அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல்களும் எந்திரம் மூலம் கட்டப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறுவைக்கு ஆயத்தம்
மேலும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் ஆயத்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நாற்று விடுவது, பாய்நாற்றங்கால் தயார் செய்வது. நடவு பணிகளுக்காக வயல்களில் எரு இடுவது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.