கோடை சீசன்:ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்


கோடை சீசன்:ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
x

கோடை சீசனையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததோடு, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நீலகிரி

ஊட்டி

கோடை சீசனையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததோடு, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கோடை சீசன்

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர், அக்டோபரில் இரண்டாவது சீசனும் நடக்கிறது. இந்தாண்டு கோடை சீசன் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கியது. வழக்கமாக தமிழகத்தின் சமவெளி பகுதியில் வெயில் சுட்டெரிக்கும். அப்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் ஊட்டிக்கு வரும். ஆனால் தற்போது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது ஆனாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.

படகு சவாரி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்தனர். இதேபோல் தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் மற்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். நேற்று பூங்காவுக்கு 17 ஆயிரத்து 171 பேர் வந்தனர்.

இதனால் ஊட்டி படகு இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அப்போது படகு இல்லத்தில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குதூகளித்தனர்.

மலை ரெயில் பயணம்

ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ெரயிலுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்ட சுற்று ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். மேலும் தொட்டபெட்டா மற்றும் பைக்காரா, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

இதேபோல் குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.

சீசன் களை கட்டி இருப்பதால், ஊட்டி குன்னூர் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் சாலையில் காத்திருந்து மெதுவாக ஊர்ந்து சென்றன.


Next Story