பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்


பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி கூறினார்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை உழவு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கோடை உழவிற்கு இதுவே ஏற்ற தருணம். அறுவடை செய்து தரிசாக கிடக்கும் நிலங்களை விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதலில் வயலை இரும்பு கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் கொண்டோ குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதி உழவு செய்ய வேண்டும்.

இவ்வாறு கோடை உழவு மேற்கொள்வதால் புல் - பூண்டுகள் வேர் அறுந்து கருகிவிடுகிறது. மண் பொளபொளப்பு தன்மை அடைகிறது. பயிர் பருவகாலங்களில் சிலவகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுபுழுக்களாக மாறி வளர்ந்து கொண்டிருக்கும்.

பூச்சி தாக்குதல்

உழவு செய்வதன் மூலம் இந்த புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு அவை பறவைகளால் பிடித்து தின்று அழிக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த பயிர்சாகுபடியின்போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாக குறைகிறது.

களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. மண்ணில் நீர்பிடிப்பு தன்மை பெருகுகிறது. மண்ணின் பவுதீக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. உரம் சமச்சீராக கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன் பயிர் செழித்து வளர்கிறது. இதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கிறது.

ஈரத்தன்மை

அதே சமயம் மணல்சாரி, களர் மற்றும் உவர் நிலங்களில் கோடை உழவை தவிர்க்க வேண்டும். காரணம் கோடை உழவினால் மணல்சாரி நிலங்களில் ஈரத்தன்மை குறைகிறது.

களர் மற்றும் உவர் நிலங்களில் நீர் ஆவியாகிவிடுவதால் உப்புத்தன்மை ஏற்படும் அபாயம் வரும். எதிர்வரும் கோடை காலத்தில் பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வது நல்ல மகசூலை கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story