குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி


குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி
x

சேலம் மாநகர காவல்துறை சார்பில் கிச்சிப்பாளையம் பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாமை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

சேலம்

சேலம் மாநகர காவல்துறை சார்பில் கிச்சிப்பாளையம் பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாமை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

கோடை கால பயிற்சி

சேலம் மாநகர காவல்துறை சார்பில் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு வெற்றி விதைகள் என்ற திட்டத்தின் கீழ் கோடை கால பயிற்சி முகாம் கிச்சிப்பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி கலந்து கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, இந்த முகாமின் நோக்கம் மகிழ்ச்சி மட்டும் தான். இந்த 15 நாட்கள் நடக்கும் முகாமில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அதேசமயம், உங்களது பெற்றோருக்கும் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும். சிறு, சிறு வேலைகளை செய்து கொடுப்பதோடு உங்கள் வேலையை நீங்களே செய்து கொள்ள வேண்டும். மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் உங்களது தந்தை வேலைக்கு புறப்படும்போது, கட்டாயம் அவருக்கு நீங்கள் ஹெல்மெட் எடுத்து கொடுக்க வேண்டும் என்றார்.

சுற்றுலா அழைத்து செல்ல..

தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா பேசும்போது, கிச்சிப்பாளையம் என்றாலே ஒரு தவறான பெயர் இருக்கிறது. அதை மாற்றுவதற்கு அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த தவறான எண்ணத்தை உடைக்கும் வகையில் நீங்கள் எல்லாம் வாழ்ந்து காட்ட வேண்டும். இந்த முகாமில் 15 நாட்கள் தவறாமல் வரும் உங்களை ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளேன், என்றார்.

முகாமில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் திருக்குறள் கூறியும், சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 15 நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் வளரும் குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு எளிமையான முறையில் ஆங்கிலம் கற்றல், ஓவியம் வரைதல், எளிய முறையில் மனப்பாடம் செய்தல், மனதை நல்லொழுக்கப்படுத்த பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story