அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி சென்னை ஐ.ஐ.டி. ஏற்பாடு


அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி சென்னை ஐ.ஐ.டி. ஏற்பாடு
x

அறிவியல், தொழில்நுட்பத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க சென்னை ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சியை அளிக்கிறது. இதை தமிழ், ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கிறது.

சென்னை,

அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கணிதம் ஆகிய பாடங்கள் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களை சென்றடையும் வகையில், கோடைகால பயிற்சி வகுப்பை சென்னை ஐ.ஐ.டி. 20-ந் தேதி (நேற்று) முதல் வருகிற 25-ந் தேதி வரை நடத்துகிறது. இந்த பயிற்சி மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக ஆக்கப்பூர்வமாகவும், புதுமையாகவும் சிந்திக்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்கப்படுத்த இருக்கின்றனர். அதனையே நோக்கமாக கொண்டு சென்னை ஐ.ஐ.டி. இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 100 மாணவிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடியும் உடன் இருந்தார். மேலும் இந்த பயிற்சி திட்டத்தை ஆன்லைன் முறையில் செயல்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டு இருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி. ஏற்பாடு

முதற்கட்டமாக அழைத்து வரப்பட்டுள்ள இந்த 100 மாணவிகளுக்கு, என்ஜினீயரிங் துறையில் சுற்றுச்சூழல் மற்றும் மின்னனு அம்சங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தொழில்நுட்ப வளர்ச்சி, பயன்பாட்டு கணிதம் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் தொடர்பான தலைப்புகளில் பாடங்கள் தமிழ், ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கப்பட உள்ளன. இந்த மாணவிகளுக்கு உணவு, தங்கும் இடவசதி ஆகியவற்றை சென்னை ஐ.ஐ.டி. ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. மாணவிகள் மின்னணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 100 சிறப்பு கருவிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, 'இந்த பயிற்சி வகுப்பு திட்டம் அரசு பள்ளி மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களின் பெருமைக்குரிய இடமாக அரசு பள்ளிகள் மாற வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். வேலைதேடுவோருக்கு பதிலாக வேலையை உருவாக்குவோராக மாணவர்களை ஊக்குவிக்க இந்த திட்டம் உதவும். இந்த பாடத்திட்டத்தின் 70 சதவீதம் நடைமுறை கூறுகளையும், 30 சதவீதம் தொழில் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் நிபுணர்களாக இருபவர்களின் ஊக்கமளிக்கும் உரைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்' என்றார்.

மேலும் அமைச்சரிடம், 'மருத்துவம், தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது போல, சென்னை ஐ.ஐ.டி.யிலும் அரசு பள்ளி மாணவர்கள் வந்து படிக்கும் வகையில் இடஒதுக்கீடு கிடைக்க அரசு முயற்சி செய்யுமா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'அரசு பள்ளியில் படித்து முடிக்கும் மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் வகையில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு முயற்சி செய்வோம். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்' என்றார்.

ஒரு லட்சம் மாணவர்கள்...

சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறுகையில், 'தற்போது இந்த திட்டத்தில் 100 மாணவிகள் பங்கேற்று இருக்கின்றனர். ஆனால் ஒரு லட்சம் மாணவர்களை இந்த திட்டம் சென்றடைவதுதான் எங்களின் நோக்கம். இப்போது சேர்ந்துள்ள 100 பேரும் சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டம் பெறவேண்டும் என்பதே எனது விருப்பம்' என்றார்.


Next Story