கோடை விடுமுறையையொட்டிகொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
கடத்தூர்
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். எனவே அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக கோபி, சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அங்குள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன் வறுவல்களை வாங்கி ருசித்து சாப்பிட்டனர். பலர் தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து உண்டனர். மேலும் அங்கு பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர்.