வனப்பகுதி நிலத்தில் சூரியசக்திவேலி அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
வனப்பகுதி நிலத்தில் சூரியசக்திவேலி அமைக்க விவசாயிகளுக்கு வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தளி,
வனப்பகுதி நிலத்தில் சூரியசக்திவேலி அமைக்க விவசாயிகளுக்கு வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சூரியமின்வேலி
வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் மின்வேலிகளை அமைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு மின் வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023 வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகள் புதிதாக சூரிய சக்தி மின்வேலிகள் அமைப்பதற்கும், ஏற்கனவே விவசாய நிலங்களை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்யவும், தரப்படுத்தவும் மற்றும் ஒழுங்குபடுத்தவும் வழிவகை செய்கிறது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் தேவேந்தர குமார் மீனா கூறியதாவது:-
ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலங்களில் புதிதாக சூரிய சக்தி மின் வேலைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் உடுமலை பாபுகான் வீதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் அலுவலகத்தில் படிவம் 1 மூலம் மனுதாரரின் முகவரி, பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரைபடம் மற்றும் புகைப்படத்துடன் பதிவு செய்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
அதேபோன்று காப்புக் காடுகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்கனவே மின்வேலிகளை அமைத்து உள்ளவர்கள் அது குறித்த விவரங்களை அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
தடையின்மை சான்று
விதிகளில் நிர்ணயிக்கப்பட்டு உள்ள பி.எஸ்.ஐ. தரநிலை விதிமுறைகளுக்கு உட்பட்டதாக மின் வேலிகள் இருக்க வேண்டும்.புதிதாக சூரிய மின்வெளி அமைக்க வேண்டியும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சூரிய மின்வெளிகளை பதிவு செய்ய வேண்டியும், விண்ணப்பித்த நிலங்களை தமிழ்நாடு அரசு மின்வாரியம் மற்றும் வனத்துறையினர் அதிகாரிகள் கொண்ட கூட்டு குழு மூலம் களத்தணிக்கை செய்யப்படும். அதன் பின்பு பிறகு தடையின்மை சான்று வழங்கவும் நிராகரிக்கவும் 45 நாட்களுக்குள் குழுவினரால் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
----------------