இடையக்கோட்டையில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்
இடையக்கோட்டையில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் சூரியகாந்தியை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது சூரியகாந்தி நன்கு வளர்ச்சியடைந்து, அவை பூத்துக்குலுங்குகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள நிலங்கள் மஞ்சள் போர்வை போர்த்தியது போன்று கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன.
இதுகுறித்து இடையக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், சூரியகாந்தி விதைகளில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. சூரியகாந்தி சாகுபடி செய்து, 80 முதல் 90 நாட்களில் விளைச்சலை தருகிறது. ஏக்கருக்கு 600 கிலோ முதல் 900 கிலோ வரை சூரியகாந்தி விதைகளை அறுவடை செய்யமுடியும். தற்போது இப்பகுதியில் சூரியகாந்தி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதையடுத்து சூரியகாந்தி விதைகளை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.
அதன்படி, ஒரு கிலோ சூரியகாந்தி விதைகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே சூரியகாந்தி விதைகளை வேளாண்மைத்துறை அலுவலகம் மூலம் அரசு சார்பில் கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றனர்.