கொல்லியங்குணத்தில்சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்நாளை நடைபெறுகிறது


கொல்லியங்குணத்தில்சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்நாளை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

கொல்லியங்குணத்தில் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

விழுப்புரம்


மயிலம்,

மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பஸ் நிறுத்தம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், திருப்பணிகள் முழுமை பெறாமல், மேற்கூரை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் சுந்தர விநாயகரை மட்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதையடுத்து, தற்போது கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்திட ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகளின் தலைமையில் முன்பு இருந்த இடத்திலிருந்து மேற்பகுதியில் புதியதாக இடம் தேர்வு செய்து புதிதாக மண்டபம், விமானம் ஆகியன அமைக்கப்பட்டு, சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டது.

இந்த பணிகள் முழுமை பெற்ற நிலையில், நாளை(வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை கணபதி பூஜை, நவகிரக வழிபாடுகளுடன் விழா தொடங்கியது. நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்று (புதன்கிழமை)காலை 7 மணிக்கு 2-ம் காலயாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசலை பூஜையும் நடைபெற உள்ளது. நாளை(வியாழக்கிழமை) காலை 4-ம் காலயாகசாலை பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மயிலம் பொம்மபுர ஆதினம் 20 பட்டம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் விமான கலசங்களுக்கும், அதை தொடர்ந்து மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story