போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளர் கைது


போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

5 ஆண்டுகளாக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

ஊட்டி,

5 ஆண்டுகளாக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன் (வயது 51). இவரது மனைவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ளார். மோகன கிருஷ்ணன் ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கே பிரிவு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் திருமணமான 38 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பின்னர் மோகன கிருஷ்ணனின் பாலியல் அத்துமீறல் குறித்து, அந்த பெண் ஊழியர் பல முறை எச்சரித்து உள்ளார். இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் மோகன கிருஷ்ணன் தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பெண்ணின் வீட்டுக்கே சென்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளித்தார்.

கண்காணிப்பாளர் கைது

தொடர்ந்து அவர் விசாகா விசாரணை குழுவுக்கு பரிந்துரை செய்தார். அதன் பின்னர் குழுவினர் விசாரணை நடத்தியதில், மோகன கிருஷ்ணன் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண் ஊழியர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாகா கமிட்டி விசாரணை

கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன் 1998-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் 38 வயது பெண் ஊழியர் தவிர பலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக 3 பேர் புகார் கொடுத்து உள்ளனர். இதுகுறித்து விசாகா கமிட்டியினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மோகன கிருஷ்ணனைபணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளார்.


Next Story