சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வுசெய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வேலூர்

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், 15-ந் தேதி சிரசு திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று காலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தார்.

சிரசு திருவிழாவின் போது அம்மன் சிரசு புறப்படும் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து சிரசு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையை அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசிக்கவும், தரிசித்த பின் வெளியே வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, சீனிவாசன், பாலசுப்பிரமணியம், முத்துக்குமார், ரஜினிகாந்த், முகேஷ்குமார், சுந்தரமூர்த்தி, கோவில் நிர்வாக அலுவலர் டி.திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1,500 போலீசார்

கெங்கையம்மன் தேரோட்டம், சிரசு திருவிழா மற்றும் பூப்பல்லக்கு ஆகிய விழாவிற்காக காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கெங்கையம்மன் திருவிழாவின் போது பல வருடங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார், 200 ஊர்க் காவல் படையினர் என 1,700 பேர் ஈடுபடுவார்கள். பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் திருவிழாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு பக்தர்கள் சிரமம் இன்றி பாதுகாப்பாக அம்மனை தரிசித்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்காக நகரின் பல இடங்களிலும் கோவிலிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். மேலும் ட்ரோன் கேமராக்கள் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

திருவிழா காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து போட்டோக்களுடன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். திருவிழாக்கு வருபவர்களின் வாகனங்கள் சிரமம் இன்றி நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story