111 போலீஸ் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு


111 போலீஸ் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு
x

ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் 111 வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.

ஈரோடு

ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் 111 வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.

வாகனங்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் போலீசார் பயன்படுத்தும் வாகனங்களை ஈரோடு அருகே ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேற்று ஆய்வு செய்தார். இதில் போலீசார் பயன்படுத்தும் ஜீப், கார், வேன், பஸ் உள்பட 60 வாகனங்களும், போலீசார் ரோந்து செல்வதற்காக பயன்படுத்தப்படும் 51 இருசக்கர வாகனங்களும் என மொத்தம் 111 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் குருசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆலோசனை கூட்டம்

இதேபோல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஊர்காவல் படை அலுவலகத்தை சீரமைக்கும் பணியையும், விழிப்புணர்வு மின்னணு பலகை இடமாற்றம் செய்யப்பட்டதையும், போலீஸ் உணவகத்தையும் அவர் ஆய்வு செய்து, போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், தலைமறைவான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் உள்கோட்டத்தை சேர்ந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story