மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பங்கேற்பு
மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டாா்.
மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களது வாரிசுகள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையில் சேர்வதற்காக கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மையங்களில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தால் 3 மாத இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி கடந்த 29.3.2023 அன்று முதல் தொடங்கி நடந்தது. இதையடுத்து மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு நிறைவு விழா நேற்று கடலூரில் நடைபெற்றது. இதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (கடலோர பாதுகாப்பு குழுமம்) சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றிருப்பது உங்களை காத்துக்கொள்ளவோ, நாட்டை காக்கவோ மட்டும் பயிற்சி அல்ல. சிறந்த குடிமகனாக உருவாக்குவதற்கு தான் பயிற்சி. இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், சாதாரண மனிதர்களை போல் இல்லாமல் மாறுபட்ட கோணத்தில், மாறுபட்ட செயல்களின் மூலம் வெற்றி அடைய இந்த பயிற்சி உதவும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி காலத்தில் கற்றுக்கொண்ட திறனை மேம்படுத்தி உங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி உங்களது கிராமத்து இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதில் கடற்படை லெப்டினென்ட் கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன், மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.