ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய மேற்பார்வையாளர்கள்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் மேற்பார்வையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
தமிழ்நாடு ஓவர்சீயர்ஸ் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள் (ஓவர்சீயர்ஸ்) கருப்பு பட்டை அணிந்து நேற்று பணியாற்றினர். அதன்படி, தேனி மாவட்டத்திலும் மேற்பார்வையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்துக்கு கருப்பு பட்டை அணிந்தும், கையில் கோரிக்கைகள் அடங்கிய பேனருடனும் பணிக்கு வந்தனர்.
மேற்பார்வையாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். காலிப்பணியிடங்களில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர்களை கொண்டு நியமனம் செய்வதை கைவிட்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டும். அரசு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு புதிய பொறியாளர் பணியிடங்களை உருவாக்கி அதற்கு தகுதியான மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.