வனப்பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்


வனப்பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்
x

கொடைக்கானல் வனப்பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் போதிய அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், வாகன நிறுத்துமிடம் போன்றவை இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து வனப்பகுதியில் உள்ள மோயர்பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடு ஆகிய பகுதிகளில் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் வனச்சரகர் விஜயன், வனவர்கள் ஜெயச்சந்திரன், நாராயணன் ஆகியோர் தலைமையில் வனஊழியர்கள் மூலம் நேற்று முதல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பழனியில் இருந்து மொத்தமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொள்முதல் செய்யப்பட்டு ஆங்காங்கே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சீசன் காலம் முடியும் வரை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல விரைவில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story