இனிவரும் தேர்தல்களில் இந்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு ஆதரவு; காடேஸ்வரா சுப்பிரமணியம் பேச்சு


இனிவரும் தேர்தல்களில் இந்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு ஆதரவு; காடேஸ்வரா சுப்பிரமணியம் பேச்சு
x

“இனிவரும் தேர்தல்களில் இந்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்போம்” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.

திருநெல்வேலி

"இனிவரும் தேர்தல்களில் இந்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்போம்" என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.

பிரசார பயணம்

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரசார பயணம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பிரசார பயணம் நேற்று நெல்லைக்கு வந்தது. இதையொட்டி பிரசார பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் வரவேற்றார். மாநில செயலாளர் குற்றாலநாதன், துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், கலை இலக்கிய பிரிவு ஒருங்கிணைப்பாளர் கனல் கண்ணன், வள்ளியூர் ராஜரிஷி முத்தையா சுவாமி, நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகர் ஆகியோர் பேசினார்கள்.

கட்டுப்பாடுகள்

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழர் விடுதலை களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், அந்தணர் முன்னேற்ற கழக மாநில தொண்டர் அணி செயலாளர் முத்துராமன், அகில இந்திய யாதவ மகா சபா மாணவர் அணி தலைவர் தாஸ், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு வருகிறது.

போலீஸ் துறையில் அதிகாரிகள் 2 பிரிவாக உள்ளனர். மத, இன பாகுபாடு இன்றி நேர்மையாக பணிபுரிபவர்களும் உள்ளனர். மற்றொரு தரப்பினர் இந்து நிகழ்ச்சிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

இந்துக்களுக்கு முன்னுரிமை

தமிழகத்தில் தி.மு.க. எத்தனை ஆண்டு பதவியில் இருக்கிறது? என்பது தெரியவில்லை. மராட்டியத்தின் நிைலமை தமிழகத்துக்கும் வரும். தமிழக முதல்-அமைச்சர் எப்போது ராஜினாமா செய்வார் என தெரியவில்லை. ஏனென்றால் இங்கு எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசிக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது.

தற்போது, இந்துக்கள் விழிப்புடன் உள்ளனர். எனவே, இனி வருகின்ற தேர்தல்களில் இந்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள், இந்துக்களின் உரிமையை மீட்டு தருகிறவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

பேட்டி

தொடர்ந்து காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் இந்துக்களின் உரிமை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. அதற்காக தான் இந்துக்களின் உரிமைகளை மீட்பதற்காக பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் காய்த்து வழங்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு ஒவ்வொரு அம்மன் கோவிலுக்கும் இலவசமாக அரிசி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடைபெற்று வருவதாக அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து வருகிறார். அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லை.

தமிழகத்தில் கோவில்களின் பணத்தை கொண்டு ஊழல் நடந்து வருகிறது. தங்கத்தை உருக்கி அதில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாமி தரிசனம்

முன்னதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வள்ளியூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது, மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, இணைச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் பரமசிவம், பா.ஜ.க. நிர்வாகி சிவராம குட்டி உள்பட பலர் உடன் சென்றனர்.


Next Story