முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா
குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேளிமலை முருகன் கோவில்
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருக பெருமானின் விழாக்களில் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி விழா ஆகும். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடந்தது.
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு முருக பெருமான் கோவிலில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் சூரனோடு போர் புரிந்தார். பின்னர் இறுதியாக கோவிலின் கிழக்கு நடையில் வைத்து சூரனை வதம் செய்தார். தொடர்ந்து கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பத்மநாபபுரம்
இது போல் பத்மநாபபுரம் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு முருக பெருமான் கோவிலில் இருந்து எழுந்தருளி பத்மநாபபுரம் நான்கு ரதவீதிகளிலும் சூரனோடு போர் புரிந்தார். இறுதியில் கோவில் முன்வாசலில் வைத்து சூரனை வதம் செய்தார். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
குளச்சல்
குளச்சல் அம்பாள் தேவசேனாபதி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று பிற்பகலில் குளச்சல் நகர சாலைகளில் சூரன் வீதி உலா வருதல், மாலை 5 மணிக்கு சிறப்பு பஜனை, 5.30 மணிக்கு முருக பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா எழுந்தருளல் போன்றவை நடந்தது. மாலை 5.30 மணி முதல் 6.45 மணிவரை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
தொடர்ந்து முருக பெருமானுக்கு களிமார் ஆற்றில் ஆராட்டு, பின்னர் மயில் வாகனத்தில் கோவிலுக்கு சாமி பவனி வருதல், இரவு 9 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலையில் தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து சிறப்பு அன்னதானம் போன்றவை நடக்கிறது.
நாகர்கோவில்
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் நேற்று காலையில் சாமிக்கு அபிேஷகம், தீபாராதனை போன்றவை நடந்தன. தொடர்ந்து மாலை 4 மணியளவில் முருக பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் சூரனை வதம் செய்ய எழுந்தருளினார். 4 ரத வீதிகளில் வலம் வந்து பின்னா் நாகராஜா கோவில் திடலில் வைத்து சூரனை முருக பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி நாகராஜா கோவில் சுற்று வட்டார பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதே போல் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் உள்ள முருக பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
வெள்ளிமலை
வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சூரசம்ஹார விழாவையொட்டி நேற்று மதியம் 12.30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 2 மணி முதல் சிங்காரி மேளம், ஒயிலாட்டம் தொடர்ந்து சாமி சூரசம்ஹாரத்திற்காக குதிரை வாகனத்தில் எழுந்தருளல், 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் போன்றவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு சாமி மயில் வாகனத்தில் உலா வருதல் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல், பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை கண்டேஸ்வரமுடைய நயினார் கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பாலமுருகன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியபுரத்தில் இருந்து ஆரல்வாய்மொழி சந்திப்பு வரை சூரன் முன்னே செல்ல பாலமுருகன் வாகனத்தில் பின்னால் துரத்தி சென்றார். அங்கிருந்து மீண்டும் சுப்பிரமணியபுரம் வந்ததும் அங்குள்ள மைதானத்தில் சூரனை பாலமுருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. இரவு பாலமுருகனுக்கு அபிஷேகம், பால முருகன் மயில் வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முகபெருமாள் மற்றும் நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தோவாளை
தோவாளை செக்கர் கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழாவையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு சாமி சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், தொடர்ந்து சூரன் முன்னே செல்ல சுப்பிரமணியசாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் பின்னால் துரத்தி செல்லுதல் போன்றவை நடந்தது. முடிவில் கோவில் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் சூரனை செக்கர்கிரி சுப்பிரமணியசாமி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஆரல் பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், தோவாளை பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு, யூனியன் கவுன்சிலர் பூதலிங்கம், செக்கர்கிரி கோவில் நிர்வாக குழு தலைவர் கருணாநிதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இரவு சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், மயில் வாகனத்தில் சாமி பவனி வருதல் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி தோவாளை, ஆரல்வாய்மொழி பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பஸ்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன.
மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில்
ஆரல்வாய்மொழி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி மாலை 4 மணிக்கு சாமி சம்ஹாரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சூரன் முன்னே செல்ல சுப்பிரமணியசுவாமி பின்னால் துரத்தி வந்தார். வடக்கூர் 4 ரதவீதியை சுற்றி ஆரல் சந்திப்பு வந்து மீண்டும் திரும்பி வேட்டை வெளியில் சூரனை சாமி வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் முத்துக்குமார் மற்றும் விழாக்குழுவினர், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.