குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழாவையொட்டி குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி,
கந்தசஷ்டி விழாவையொட்டி குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குன்றக்குடி முருகன் கோவில்
காரைக்குடி அருகே உள்ளது குன்றக்குடி. இங்கு பிரசித்தி பெற்ற சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக இந்த விழா சரிவர நடைபெறவில்லை.
இதையடுத்து இந்த ஆண்டு இந்த விழா கடந்த 25-ந்தேதி அன்று லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சூரசம்ஹாரம்
இதையொட்டி சூரசம்ஹார விழாவையொட்டி மாலை 4.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சண்முகநாதபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கோவிலில் இருந்து சூரன் முன் செல்ல அதன் பின்னால் வெள்ளி ரதத்தில் சுவாமி கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். அதன் பின்னர் கோவில் திருத்தேர் நிற்கும் இடத்தில் சூரனை முருகபெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(திங்கட்கிழமை) சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோவில் அருகே எழுந்தருளியுள்ள முருகன் கோவிலில் 7-ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. கடந்த 25-ந்ேததி காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை 9.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.