திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது


தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணதிர்ந்த 'அரோகரா' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணதிர்ந்த 'அரோகரா' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி திருவிழா

அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில் முருக பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கின்றார். முருக பெருமான் சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது.

தங்க ரதம்

தினமும் மதியம் சண்முகவிலாச மண்டபத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுவாமி கடற்கரையில் எழுந்தருளல்

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான நேற்று மாலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலையில் உச்சிகால அபிஷேகம் நடந்தது.

மதியம் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

மாலையில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 3 மணிக்கு கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். தொடர்ந்து 3.50 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார்.

சூரசம்ஹாரம்

முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகம் கொண்ட தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக, அவரை மூன்றுமுறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிராக நின்றான். 4.35 மணிக்கு முருகபெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.

அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்றுமுறை சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். 4.50 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் சம்ஹாரம் செய்தார்.

தனது சகோதரர்களின் இழப்பால் கோபம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வந்தான். தொடர்ந்து 5.10 மணிக்கு முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார்.

இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்து கொண்டார்.

சூரசம்ஹாரம் நிகழ்ந்தபோது வானத்தில் கருடன் மூன்று முறை சுற்றி வந்து வட்டமிட்டது. அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா' போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

சாயாபிஷேகம்

சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சினம் தணிந்த சுவாமிக்கும், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி கிரிப்பிரகாரம் வழியாக வலம் வந்து, கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளினார்.

அங்குள்ள கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.

லட்சக்கணக்கான பக்தர்கள்

விழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பவானி சுப்புராயன், புகழேந்தி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, மாவட்ட நீதிபதிகள் சுபாதேவி (சென்னை), இந்திராணி (தஞ்சாவூர்), திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி வஷித்குமார், மாஜிஸ்திரேட்டு வரதராஜன், உரிமையியல் நீதிபதி (பொறுப்பு) முத்துலட்சுமி, மாஜிஸ்திரேட்டுகள் மகாராஜன் (ஸ்ரீவைகுண்டம்), செல்வம் (குழித்துறை),

அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம்,

ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், தொழில் அதிபர்கள் தங்கராஜ் நாடார், கவாஸ்கர், ஆத்தூர் ரமேஷ், என்ஜினீயர் நாராயணன் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் நின்ற பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. சூரசம்ஹாரத்தை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

கடற்கரைக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரைகள், பெரிய டி.வி.க்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

நகர் முழுவதும் ஆங்காங்கே குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு பானகரம், குளிர்பானம், அன்னதானம் போன்றவற்றை வழங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.

2,700 போலீசார் பாதுகாப்பு

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், திருச்செந்தூர் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு மிதவை தடுப்புகள் கடலில் மிதக்கவிடப்பட்டன. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் படகுகளில் தயார் நிலையில் இருந்தனர்.

நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று, திருக்கல்யாணம்

இன்று (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

-----------

(பாக்ஸ்) சூரசம்ஹார விழா துளிகள்

* கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்ய வந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு பக்தர் ஒருவர் மயில் தோகையாலான விசிறியை வீசியவாறு வந்தார்.

* சுவாமி ஜெயந்திநாதருக்கு முன்பாக சிவனடியார்கள், முருக பக்தர்கள் மேளவாத்தியங்கள், கொம்பு வாத்தியம் முழங்கியவாறும், திருச்சங்கு ஊதியவாறும் வந்தனர்.

* கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், தற்காலிக உயர்கோபுரங்களை அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டிரோன் கேமராக்களை இயக்கியும் கண்காணித்தனர்.

----------


Next Story