வைகை உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது
கடலாடி, கமுதி உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்லாமல் வைகை உபரிநீர் கடலில் வீணாக கலக்கிறது என்று அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.
கடலாடி, கமுதி உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்லாமல் வைகை உபரிநீர் கடலில் வீணாக கலக்கிறது என்று அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.
குறை தீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. விவசாய இணை இயக்குனர் பாஸ்கரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஸ்கோடி, கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
மாவட்டத்தில் மழையும், வைகை தண்ணீரும் எப்போதாவதுதான் முறையாக வருகிறது. இருக்கின்ற வளத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில் எங்களின் விவசாய நிலங்களில் காட்டுமான்கள், காட்டு பன்றிகள், காட்டு மாடுகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. அவற்றை பிடிக்கவோ, அப்புறப்படுத்தவோ வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கண்ட வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையின் சார்பில் நிவாரணம் பெற்றுத்தரவேண்டும் என்று ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தனர்.
இதற்கு வனத்துறையினர் மாவட்டத்தில் காட்டு பன்றிகள், காட்டு மான்கள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. அவை அழிந்து வரும் இனம் என்பதால் அவற்றை அழிக்க முடியாது. இதுதவிர, மாவட்டத்தில் காட்டு மாடுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. வனத்துறையினர் இவ்வாறு கூறியதும் காட்டு மாடுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதை நாங்களே எங்களின் வயல்வெளிகளில் பார்த்துள்ளோம். அவ்வாறு இருக்கையில் இல்லை என்று கூறுவது தவறு. காட்டு விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் பெற்றத்தர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
டிரோன் மூலம் கண்காணிக்க உத்தரவு
இதற்கு கலெக்டர் பதில் அளித்து பேசும் போது, காட்டு பன்றிகள், காட்டு மான்கள் உள்ளதை கண்டறிந்தவாறு விவசாயிகளின் கோரிக்கைபடி காட்டு மாடுகளையும் கண்டறிய நடவடிக்கை எடுங்கள். மேற்கண்ட பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்கவிட்டு காட்டு மாடுகள் உள்ளதா? என்று தெளிவாக கண்டறிய வேண்டும். காட்டு பன்றிகள், மான்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதி வந்ததும் வழங்கப்படும் என்றார்.
வீணாகும் உபரிநீர்
இதனை தொடர்ந்து விவசாயிகள் பலர் வைகை அணையில் இருந்து அதிகளவிலான உபரி தண்ணீர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பெரிய கண்மாயை மட்டும் நிரப்பிவிட்டு மீதம் அனைத்தும் கடலில் கலந்து யாருக்கும் பயனின்றி வீணாகிவருகிறது. கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் இல்லை. பொதுப்பணித்துறையினர் இந்த தண்ணீரை முறையாக பிரித்து கண்மாய்களுக்கு அனுப்ப தவறி விட்டனர்.
தண்ணீரை திருப்பி அனுப்ப எதற்கு நிதி. இனி மழை பெய்வது குறைவுதான் என்று தோன்றுகிறது. இனியாவது தண்ணீரை முறையாக பிரித்து அனுப்பி வறண்ட கண்மாய்களை நிரப்பி விவசாயத்திற்கு உதவிட வேண்டும். மாவட்டத்தில் உரக்கடைகளில் இருமடங்கு விலை விற்கின்றனர் புகார் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.