கடலில் கலக்கும் உபரி நீர்: கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படுமா?
பல லட்சம் கன அடி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதால் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் ஆறு
அரியலூர் மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரமாக இருப்பது கொள்ளிடம் ஆறு. இந்த ஆறு அரியலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 கிலோ மீட்டர் பயணித்து கிளை வாய்க்கால்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் மழை பெய்தாலும் மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீரை திறந்து விட்டாலும் ஒரே வடிகாலாக இருப்பது கொள்ளிடம் ஆறு மட்டுமே.கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை நிரம்பி கொள்ளிடம் ஆற்றில் பல லட்சம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் உபரி நீரை சேமிக்க முடியாமல் கடலில் வீணாக கலந்தது நினைவு கூரத்தக்கது.
மணல்குவாரி
கொள்ளிடம் ஆறு பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் அட்சய பாத்திரமாக திகழ்கிறது. மேலும், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது. மணல் குவாரி தற்போது செயல்பாட்டில் இல்லாவிட்டாலும் ஏற்கனவே கொள்ளிடத்தில் செயல்படுத்தப்பட்ட மணல் குவாரியால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு, கனிம வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் தற்போது சில ஆண்டுகளாக மணல் குவாரிகள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை வீராணம் குடிநீர் திட்டம்
இதுகுறித்து விவசாயி தங்க சண்முகசுந்தரம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரால் மாவட்டத்தின் டெல்டா பகுதியான திருமானூர், தா.பழூர் ஒன்றியங்களில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கொள்ளிடம் ஆற்றில் மழைக்காலங்களில் திறந்து விடப்படும் உபரி நீரை சேமிப்பதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது சென்னை வீராணம் குடிநீர் திட்டத்திற்காக மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் 6 இடங்களில் ராட்சத போர்கள் மூலம் நீரை எடுக்க முயற்சித்த போது இப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆனால் அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
வறண்டு கிடக்கும் ஏரிகள்
விவசாயி பாளை திருநாவுக்கரசு கூறுகையில் பருவமழை இல்லாத சமயத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் போது கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீர் அனைத்தும் கடலில் கலப்பதால் விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் கொள்ளிடத்தில் கரையோரத்தில் உள்ள ஏரிகள் வறண்டே காணப்படுகிறது.
குறிப்பாக தா.பழூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு பாசன வசதி தரக்கூடிய சுத்தமல்லி நீர்த்தேக்கம் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 10,000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நீர் தேக்கத்திற்கு வரத்து வாய்க்கால்கள் முறையாக இல்லாததும், இருக்கக்கூடிய வரத்து வாய்க்கால்களை சீரமைக்காததுமே காரணமாக கூறப்படுகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் வீணாகும் தண்ணீரை இவ்வாறு வறண்டு கிடக்கும் ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்களுக்கு திருப்பி விட்டால் ஏரிகளும் நிறையும். விவசாயமும் செழிக்கும். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுப்பது யார்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ராட்சத போர்வெல்கள் ஏற்கனவே செயல்பட்ட மணல் குவாரிகள் போன்றவைகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டதோடு விவசாயத்திற்கான நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
தடுப்பணை கட்ட கோரிக்கை
விவசாயி ஆறுமுகம் கூறுகையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தூத்தூர் பகுதியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஆய்வு பணிகளும் நடைபெற்றன. ஆனால் இந்த திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடிநீருக்காக பல்வேறு மாநிலங்களில் கையேந்தும் நாம் ஏன் கொள்ளிடத்தில் வீணாக கடலில் கலக்கக்கூடிய தண்ணீரை சேமிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தடுப்பணை கட்டினால் மணல் குவாரி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் என்ற காரணத்தினால் தான் தடுப்பணை கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
எனவே வீணாக கடலில் கலக்கக்கூடிய நீரை சேமிக்கும் வகையில் கொள்ளிடத்தில் கதவுகளுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என திருமானூர், தா.பழூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர் என்றார்.