கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்    ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
x

இலவச மனைப்பட்டா கேட்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாலிகண்டு தைக்கால், தோப்பிருப்பு மற்றும் கொ. பஞ்சங்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை ஒப்படைப்பதற்காக திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இலவச மனைப்பட்டா

அந்த மனுவில், நாங்கள் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வக்பு வாரிய இடத்திலும், நீர் நிலை புறம்போக்கு இடத்திலும் வீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் தினக்கூலி வேலைக்கு சென்று தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில் மில்லாத்தோப்பு பகுதியில் 18 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் குடிசை அமைத்ததை, அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதனால் நாங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். ஆகவே இந்த இடத்தை பார்வையிட்டு, எங்களுக்கு மில்லாத்தோப்பில் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பரபரப்புமனுவை பெற்ற அலுவலர் ஒருவர், இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை கேட்ட அவர்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்காமல் திருப்பி சென்றனர். இருப்பினும் கலெக்டர் அலுவலகத்துக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை பொதுமக்கள் ஒப்படைக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story