20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு
மன நலம்பாதிக்கப்பட்டு 20 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன வடமாநிலபெண் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மன நலம்பாதிக்கப்பட்டு 20 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன வடமாநிலபெண் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
உத்திரபிரதேச மாநிலம், ஆக்ரா தாலுகா, பதேபூர் சிக்ரி அடுத்த நுன்ஹய் பகுதியைச் சேர்ந்த நிசார் மனைவி முபினா (வயது 55). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் பஸ் நிலையம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்து கொண்டிருந்த அவரை மீட்டு உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருந்து, மாத்திரைகள், மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது.
உறவினர்களிடம் ஒப்படைப்பு
மறுவாழ்வு இல்லத்திற்கு வந்த ஆக்ராவில் பணிபுரியும் திருப்பத்தூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி அசோக்குமாரிடம் முபினா குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆக்ரா போலீஸ் நிலையத்தின் வாயிலாக முபினா பற்றிய விவரம் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று முபினாவின் மகள் ரூபி, மகன் இர்பான், தம்பி முபின், மருமகன் ஷகில் ஆகிய 4 பேரும் மறுவாழ்வு இல்லத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டனர். அங்கு முபினாவை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து அவரை கட்டித் தழுவி, ஆனந்த கண்ணீர் வடித்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, கலெக்டர் அமர்குஷ்வாஹா, முபினாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
அவர்கள் கலெக்டர், உதவும் உள்ளங்கள் அமைப்புக்கு நன்றி தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, உதவும் உள்ளங்கள் மனநல காப்பக நிர்வாகி ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.