சுத்தியலால் தலையில் அடித்து மனைவி கொலை போலீசில் தொழிலாளி சரண்
செங்கம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அவரது கணவரே சுத்தியலால் அடித்துக்கொன்று விட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
செங்கம்
செங்கம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அவரது கணவரே சுத்தியலால் அடித்துக்கொன்று விட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடும்பம்
செங்கத்தை அடுத்த கரிமலைபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி (வயது 34). இவர் திருப்பூரில் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (30). இவர்களது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
விஜிக்கு சொந்தமாக விவசாயநிலம் உள்ளது. இந்த நிலத்தை தன் மனைவி செல்வியின் கண்காணிப்பில் விட்டுவிட்டு விஜி திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
நடத்தையில் சந்தேகம்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஜி வீட்டிற்கு வந்துள்ளார். மனைவி செல்வியின் நடத்தையில் விஜிக்கு சந்தேகம் ஏற்படவே அது குறித்து கேட்டுள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு தங்களது பிள்ளைகளை விஜி அனுப்பி வைத்திருந்தார். அப்போது திடீரென விஜிக்கும் அவரது மனைவி செல்விக்கும் மீண்டும் வாக்குவாதம் நடைபெற்றதாக தெரிகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த விஜி தனது வீட்டில் இருந்த பெரிய சுத்தியலை எடுத்து மனைவி செல்வியின் தலையில் அடித்துள்ளார். இதில் தலை பிளந்த நிலையில் செல்வி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதை தொடர்ந்து வீட்டின் கதவைக் பூட்டிவிட்டு விஜி மேல்செங்கம் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். உடனடியாக மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இது தொடர்பாக செல்வியின் உறவினர்கள் சம்பவம் குறித்து மேல்செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.இந்த சம்பவத்தில் மேலும் விஜிக்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரது உறவினர்கள் செங்கம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட செய்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த சாலை மறியலால் செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
=========