கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை


கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை
x
திருப்பூர்


ஊதியூர் பகுதியில் நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த ஊதியூர் மேற்கு பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. சிறுத்தையின் நடமாட்டம் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.

எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த சிறுத்தையை வனத்துறையின் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊதியூர் மலைப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கை குறித்து தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கயம் வட்டம், ஊதியூர் மேற்கு பகுதியில் வனத்துறையின் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 10 நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் படி காங்கயம் வனத்துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் இதுவரை பதிவாகவில்லை. சம்பவ இடத்தில் பதிந்துள்ள கால் தடங்களை வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எச்சரிக்கை பதாகை

ஊதியூர் மலை மற்றும் மலைமேல் உள்ள உத்தண்ட வேலாயுத சுவாமி கோவிலுக்கும், ஸ்ரீ கொங்கண சித்தர் குகைக்கும் மாலை 4 மணிக்கு மேல் செல்ல வேண்டாம் என வனத்துறையின் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவில் நுழைவு வாயில் முன்பு சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் மற்றும் பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story