ஒலக்கூர் பகுதியில் சாராயம், கஞ்சா விற்பனை?டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு
ஒலக்கூர் பகுதியில் சாராயம், கஞ்சா விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் டிரோன் மூலம் கண்காணித்தனர்.
திண்டிவனம்,
டிரோன் மூலம் கண்காணிப்பு
திண்டிவனம் அருகே ஒலக்கூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட ஆட்சிப்பாக்கம், நொளம்பூர் ஆகிய கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளி பகுதி, ஏரிக்கரைகளில் சாராயம், கஞ்சா, லாட்டரி விற்பனை, சூதாட்டம் என பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் உள்ளிட்ட போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற கிராமங்களுக்கு நேற்று காலை விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள வயல்வெளி, ஏரிக்கரை பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்க விட்டு சமூக விரோத செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா? என தீவிரமாக கண்காணித்தனர்.
விழிப்புணர்வு
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், தொடர் புகாரின் பேரில் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறதா? என டிரோன் கேமரா மூலம் கண்காணித்தோம். நீங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வேலைகளுக்கு செல்லும்போது சாவியை யாரும் தெரியும் வகையில் வைத்துச் செல்லக்கூடாது. அதேபோல் வீட்டில் உள்ள பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்து பொது இடங்களில் பேசக்கூடாது. மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கள் கிராமப்புறங்களில் சுற்றி திரிந்தாலோ அல்லது சாராயம், கஞ்சா விற்பனை நடந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். முன்னதாக குற்ற செயல்கள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.