'பைன் பாரஸ்ட்' சுற்றுலா தலத்தில் கண்காணிப்பு கேமரா


பைன் பாரஸ்ட் சுற்றுலா தலத்தில் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளின் உடமைகள் திருடப்படுவதால், ‘பைன் பாரஸ்ட்’ சுற்றுலா தலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வன அதிகாரிக்கு, போலீசார் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

சுற்றுலா பயணிகளின் உடமைகள் திருடப்படுவதால், 'பைன் பாரஸ்ட்' சுற்றுலா தலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வன அதிகாரிக்கு, போலீசார் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளனர்.

பைன் பாரஸ்ட்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களது பயண திட்டத்தில் முக்கிய இடம் வகிக்கும் சுற்றுலா தலங்களில், பைன் பாரஸ்டும் ஒன்றாகும்.

ஊட்டியில் இருந்து 15 நிமிட பயணத்தில் பைன் பாரஸ்டுக்கு சென்றுவிடலாம். அங்கு இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி, பனியால் சூழப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கிறது. மேலும் எப்போதும் வீசும் சில்லென்ற காற்றும், பட்டாம்பூச்சிகளின் அணிவகுப்பும் மனதை கொள்ளை கொள்கிறது. இதனால் பைன் பாரஸ்டுக்கு வந்து செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தொடரும் சம்பவங்கள்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பைன் பாரஸ்டுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் பொருட்களை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் கேரளாவில் இருந்து காரில் வந்த தம்பதி, பைன் பாரஸ்டை சுற்றி பார்த்தனர். பின்னர் திரும்பி வந்து காரை பார்த்தபோது, கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 3 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதுகுறித்து ஊட்டி புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, பைன்பாரஸ்டை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வெளியூர்களில் இருந்து வருகிறோம். ஆனால் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி செல்ல முடியவில்லை. அதில் உள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி செல்கின்றனர். இருசக்கர வாகனங்களாக இருந்தால், அதையே திருடி சென்றுவிடுகின்றனர். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஊட்டி போலீசார் கூறுகையில், திருட்டு சம்பவம் நடப்பது வன எல்லை என்பதால், இந்த செயலில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிவதில் சிரமம் உள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் இல்லை. எனவே மாவட்ட வன அதிகாரிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி, அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story