கோவில்கள், சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள்
மதுரை மாநகரில் உள்ள முக்கிய கோவில்கள், சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகரில் உள்ள முக்கிய கோவில்கள், சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
மதுரை மாநகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் ஆகிய 5 முக்கிய கோவில்கள், 4 முக்கிய சிலைகள் மற்றும் 14 சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 46 சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. அதனுடைய நேரலை காட்சிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் துணை கமிஷனர்களின் நேரடி பார்வைக்கு வருகிறது. இந்த திட்டத்தினை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், சந்தேக நபர்களை பொதுமக்கள் மத்தியில் கண்டறிய முடியும். கோவில்களில் நகை பறிக்கும் நபர் மற்றும் பிக்பாக்கெட் அடிக்கும் நபர்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும். கோவில் கூட்டத்தில் தொலைந்து போகும் சிறுவர், சிறுமியர் மற்றும் வயதானவர்களை கண்டறிய உதவும். கேட்பாரற்று கிடக்கும் ஆபத்தான பொருட்களை கண்டறிய உதவும். கோவில் அருகே இரவு நேரங்களில் நடமாடும் சந்தேக நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவும் என போலீசார் தெரிவித்தனர்.
சோதனை சாவடிகள்
இதுபோல், குற்றங்களை செய்து விட்டு, ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி, திருநகர், விளாச்சேரி, அச்சம்பத்து, ராம்நாடு ரோடு, சிந்தாமணி, மண்டேலாநகர், கோச்சடை, சிவகங்கை ரோடு, மேலூர் ரோடு, நத்தம் ரோடு, திண்டுக்கல் ரோடு, அழகர்கோவில் ரோடு, அலங்காநல்லூர் ரோடு, பசுமலை ஆகிய இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மணல், போதைப்பொருள் கடத்தல்களை கண்காணிக்கவும், தடுக்கவும் உதவும். கார் கடத்தல், குழந்தைகள் கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் விவரங்களையும் அறிய முடியும். இதுபோல், பல வகைகளில் குற்றவாளிகளை கைது செய்ய கேமராக்கள் பயன் உள்ளதாக அமையும் என போலீசார் தெரிவித்தனர்.