விராலிமலை சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது
விராலிமலை சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
விராலிமலையானது பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த வணிக பகுதியாக விளங்கி வருகிறது. திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்லக்கூடிய வகையில் விராலிமலை மையப்பகுதியாக இருப்பதாலும் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை இருப்பதாலும், இங்கு எந்நேரமும் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். மேலும் இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளதால் தினமும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்படும். இத்தனை சிறப்புமிக்க பகுதியாக விராலிமலை உள்ளதால் அதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக நகரின் முக்கிய இணைப்பு சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நகரின் முக்கிய பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்தும், பழுதடைந்தும் வேலை செய்யாமல் இருந்து வந்தது. இதுகுறித்து கடந்த மாதம் தினத்தந்தி நாளிதழில் கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யவும், மேலும் சில இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துகொண்டிருந்த நிலையில் தன்னார்வலர்கள் சிலரும் போலீசாருடன் இணைந்து புதிய கேமராக்கள் பொருத்தவும், பழுதடைந்த கேமராக்களை சரிசெய்யவும் தாமாக முன்வந்தனர். இதையடுத்து அவர்கள் உதவியுடன் நேற்று சோதனைச்சாவடி, காமராஜர் நகர், போலீஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே வேலைசெய்யாமல் இருந்த கேமராக்களை சரிசெய்தும், மணப்பாறை சாலையில் புதிதாக 3 கேமராக்கள் பொருத்தியும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலைகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குற்ற சம்பவங்களை தடுக்க விராலிமலை போலீசார் எடுத்த இந்த நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.