கடலூர் சில்வர் பீச்சில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கடலூர் சில்வர் பீச்சில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் சில்வர் பீச்சுக்கு திடீரென சென்றார். பின்னர் கடற்கரை பகுதியில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கடற்கரை பகுதியை நவீன எந்திரங்களைக் கொண்டு தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை பகுதியில் செயல்பட்டுவரும் கடைகளை சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி ஒழுங்குபடுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கண்காணிப்பு கேமரா
தொடர்ந்து கடற்கரை பகுதியை சிறந்த சுற்றுலா தலமாக மேம்படுத்தும் வகையில் படகு குழாம் அமைப்பது மற்றும் பூங்காவை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு அனைத்து அம்சங்களுடன் கூடிய பூங்காவாக மேம்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் மாலதி அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.