திருட்டை தடுக்க வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
தீபாவளியையொட்டி திருட்டு சம்பவங்களை தடுக்க வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பேசினார்.
கூடலூர்,
தீபாவளியையொட்டி திருட்டு சம்பவங்களை தடுக்க வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பேசினார்.
ஆலோசனை கூட்டம்
தீபாவளியை முன்னிட்டு கூடலூர் நகரில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், வணிகர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கூடலூரில் நேற்று நடைபெற்றது.
கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-
கேமராக்கள் பொருத்த வேண்டும்
திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் முகம் தெளிவாக பதிவு ஆகும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் உள் மற்றும் வெளிப்புறம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அந்த காட்சிகள் 30 நாட்கள் பதிவு செய்யும்படி இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் கடைக்கு வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
நகைகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும், உண்மையான முகவரியையும் சேகரிக்க வேண்டும். தொடர்ந்து இரவு நேர காவலாளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 8 மணி முதல் 11 மணி வரையும், இதேபோல் மாலை நேரத்திலும் சரக்கு லாரிகளில் பொருட்கள் இறக்கிக்கொள்ளலாம்.
பரிசு பொருட்கள்
இதேபோல் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்களை கடைகள் முன்பு நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். போலீசார் யாராவது பரிசு பொருட்கள் கேட்டால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தடை செய்யப்பட்ட குட்கா உள்பட போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூடலூர் அனைத்து வணிகர் சங்க செயலாளர் அப்துல் ரசாக், வணிகர் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் தாமஸ், நிர்வாகிகள் சம்பத்குமார், சைஜி மோன் மற்றும் வணிகர்கள் கலந்துகொண்டனர்.