குற்ற சம்பவங்களை தடுக்க அமைக்கப்பட்டுள்ளகண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்கலெக்டர் பழனி உத்தரவு


குற்ற சம்பவங்களை தடுக்க அமைக்கப்பட்டுள்ளகண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்கலெக்டர் பழனி உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்ற சம்பவங்களை தடுக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்



விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது, பராமரிப்பது குறித்து மாவட்ட அளவிலான மேற்பார்வைக்குழு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நல்ல முறையில் செயல்பட வேண்டும். ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். தொடர்ந்து, கண்காணிப்பு கேமராக்களை நல்ல முறையில் பராமரிப்பதுடன், அவற்றின் ஒளிப்பதிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைத்து தொடர் கண்காணிப்பு பணியில் குழுவினர் ஈடுபட வேண்டும்.

தொடர் கண்காணிப்பு பணி

மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் பொது இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுத்திடும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நல்ல முறையில் இயங்குகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். நகரப்பகுதிகள், கிராமப்புற முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படாமல் இருந்தால் உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் 'நமக்கு நாமே" திட்டத்தின் மூலம் பொதுமக்கள் 1 சதவீத தொகையை செலுத்தினால் அரசு 2 சதவீதம் தொகையை செலுத்தி கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை அனைத்து பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முன்வந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி அலுவலகங்கள், போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை தொடர்பு கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், கவினா, சுனில், உமாசங்கர், பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், நகராட்சி ஆணையர்கள் சுரேந்திரஷா, ஹசினா, மங்கையர்கரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story