போலீசாருக்கு கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கூண்டு


போலீசாருக்கு கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கூண்டு
x

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாருக்கு கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கூண்டு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் போலீசாரின் பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் அலுவலக பிரதான நுழைவுவாயிலின் அருகில் ஆண், பெண் போலீசார் மரத்தடியில் நின்றும், அமர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்ததும், மழை, வெயில் நேரங்களில் ஒதுங்க இடம் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது.

அங்கு பயன்படாமல் இருந்த கட்டிடம் போலீசாருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு மீண்டும் ஆதார் சேவை மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் போலீசாருக்கு ஓய்வறை இல்லாத நிலை இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக போலீசாருக்கான கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கூண்டு வசதியை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவுடன் கூடிய கூண்டு நிறுவப்பட்டது. அதில் பெண் போலீசார் அமர்ந்து பணியை மேற்கொண்டனர்.

இந்த கூண்டின் நான்கு புறங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கலெக்டர் அலுவலகத்துக்குள் வருபவர்கள் யார்? என்பதையும், அவர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்ய ஏதுவாகவும், பொதுமக்களிடம் நடைபெறும் சோதனைகளை கண்காணிக்க ஏதுவாகவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பதிவாகும் காட்சிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story