சென்னிமலை அருகே சாலை ஆக்கிரமிப்பு: இடத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
சென்னிமலை அருகே சாலை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அளவீடு செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை அருகே சாலை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அளவீடு செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுைகயிட முயற்சி
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுக்களஞ்சி ஊராட்சியில் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவிலில் இருந்து தளவாய்பாளையம் புதூர் வரை உள்ள 3 கி.மீ தார் சாலை சிறுக்களஞ்சி ஊராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தார் சாலையின் ஒரு பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும், அவர் மீது ஊராட்சி தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கடந்த மாதம் 26-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுக்களஞ்சி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அளவீடு செய்ய எதிர்ப்பு
அப்போது போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.பின்னர் இதுகுறித்த பேச்சுவார்த்தை கடந்த மாதம் 28-ந் தேதி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்வதற்காக சர்வேயர் மாரிச்சாமி மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.
அப்போது கிழக்கு தோட்டம்புதூரை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 40 பேர் அங்கு திரண்டு வந்து அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீதி மன்ற உத்தரவு
உடனடியாக சென்னிமலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், 'எங்களுக்கு அளவீடு செய்யும் நிலத்தில் உரிமை உள்ளது. இது சம்பந்தமாக பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் பெற்றுள்ளோம்' என்றனர்.
இதையடுத்து வருவாய்த்துறையினர் நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு நிலத்தை அளவீடு செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.