துடுப்பதி உரம் உற்பத்தி மையத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
துடுப்பதியில் உள்ள உரம் உற்பத்தி மையத்தில் ஆய்வில் ஈடுபட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நுண்ணுயிரி உரத்தை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
துடுப்பதியில் உள்ள உரம் உற்பத்தி மையத்தில் ஆய்வில் ஈடுபட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நுண்ணுயிரி உரத்தை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
உர தயாரிப்பு மையங்கள்
ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கிராம ஊராட்சி பகுதிகளில் நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குருவரெட்டியூர், பவானி ஊராட்சி ஒன்றியம் கவுந்தப்பாடி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முகாசிபிடாரியூர், ஓட்டப்பாறை, ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், கோபி ஒன்றியம் குள்ளம்பாளையம், நம்பியூர் ஒன்றியம் கோசனம், பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி என 10 கிராம ஊராட்சிகளில் நுண்ணுயிரி உர தயாரிப்பு மையங்கள் உள்ளன.
கலெக்டர் ஆய்வு
இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வுகள் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் துடுப்பதி கிராம ஊராட்சியில் செயல்பட்டு வரும் நுண்ணுயிரி உர தயாரிப்பு மையத்தில் நேற்று ஆய்வில் ஈடுபட்டார். அங்கு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டார்.
வேண்டுகோள்
பின்னர் அவர் விவசாயிகளிடம் பேசியதாவது:-
நுண்ணுயிர் உரமானது, நமது ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தூய்மைக்காவலர் பணியில் ஈடுபடுபவர்கள், வீடுகளில் இருந்து சேகரித்து வரும் காய்கறி கழிவுகள், பழ கழிவுகள், இலை கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிப்பு மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. உரம் தயாரிப்புக்கு 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் குளோரின் கலக்காத 90 லிட்டர் தண்ணீர், 5 கிலோ நாட்டு வெல்லம், 2 லிட்டர் புளித்த தயிர், 5 கிலோ அரிசி தவிடு அல்லது மரத்தூள், 5 கிலோ உமி ஆகிய பொருட்கள் கொண்ட கலவை தயாரித்து 42 நாட்கள் மக்கவைப்பதன் மூலம் நுண்ணுயிரி உரம் கிடைக்கிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 10 ஊராட்சிகளிலும் மொத்தம் 9 ஆயிரத்து 970 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் 5 ஆயிரத்து 367 கிலோ உரம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளதால், தங்கள் நிலங்களுக்கு தேவையான நுண்ணுயிரி உரங்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி, விளைச்சலை அதிகரிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இந்தசோதனையின் போது ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எல்.மதுபாலன் மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.