காமராஜர் பல்கலைக்கழகத்தில் கரும் பருந்து, ஈ பிடிப்பான், கருங்கரிச்சான் உள்பட 34 வகை பறவைகள் கணக்கெடுப்பு


காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய கணக்கெடுப்பில் கரும் பருந்து, ஈ பிடிப்பான், கருங்கரிச்சான் உள்பட 34 வகை பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை


காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய கணக்கெடுப்பில் கரும் பருந்து, ஈ பிடிப்பான், கருங்கரிச்சான் உள்பட 34 வகை பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பு

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் சுற்றுச்சூழல் கல்வித்துறை மற்றும் இளங்கலை நிலையான வளர்ச்சி மற்றும் நிறுவன வளர்ச்சி துறையுடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியது. இதனை மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் முனைவர் குமார் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் கல்வித் துறையின் தலைவர் கண்ணன் வரவேற்றார். அமெரிக்கன் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் பறவை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசுகையில், பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், உண்மையில் அவை தனக்கு உணவையும் உறைவிடத்தை தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன.

மனிதன் இல்லாத உலகில் பறவைகளும், விலங்குகளும் உயிர் வாழும். பறவைகளும், விலங்குகளும் இல்லாத உலகில், மனிதன் ஒருபோதும் உயிர் வாழ முடியாது என்று பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி கூறியதை நினைவுபடுத்தினார்.

34 பறவை இனங்கள்

இதைதொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் பறவைகளை கணக்கெடுத்தனர். அதில், அரசவால் ஈப்பிடிப்பான், சிறிய கரும் பருந்து, காடை, புள்ளிப் புறா, பச்சைக்கிளி, செம்போத்து, குயில், பனை உழவாரன், நீலவால் பஞ்சுருட்டான், பனங்காடை, சின்னான், பெரிய வெள்ளைசிலம்பன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, வீட்டுச்சிட்டுக்குருவி, சோளப்பட்சி, நாகணவாய், கருங்கரிச்சான், வால் காக்கை, நீல முகப் பூங்குயில் உள்ளிட்ட 34 பறவை இனங்கள் கணக்கெடுக்கப்பட்டது.

அமெரிக்கன் கல்லூரி பறவை ஆராய்ச்சி மாணவர்கள் அமீர்கான் மற்றும் கிருஷ்ண சாய் மாணவர்களுக்கு பறவைகளை கண்டறிவதில் துணை புரிந்தனர். ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story