ஊட்டி மார்க்கெட்டில் தலைமை பொறியாளர் ஆய்வு
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மார்க்கெட்டில் தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மார்க்கெட்டில் தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சி மார்க்கெட்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சி மார்க்கெட் உள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்த பின்னர், நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறார்கள்.
மார்க்கெட்டில் 1,500 நிரந்தர கடைகள், 500 தற்காலிக கடைகள் உள்ளன. இங்கு தினமும் 3,500 முதல் 4,000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வில்லை. மழை பெய்தால் மார்க்கெட்டில் வெள்ளம் தேங்குகிறது. மேலும் வாகன நிறுத்துமிடம் இல்லாதது, சுகாதாரமின்மை என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது.
அதிகாரி ஆய்வு
இந்தநிலையில் தற்போது மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி புதிய கடைகள் கட்ட ரூ.18 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தலைமை பொறியாளர் நடராஜன் நேற்று முன்தினம் ஊட்டி மார்க்கெட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மீன் கடை முதல் காய்கறி கடைகள் வரை உள்ள 190 கடைகளை முழுவதுமாக இடித்து விட்டு, புதிதாக நவீன வசதியுடன் கூடிய 231 கடைகள், 2 பொதுக்கழிவறைகள், ஏ.டி.எம்.மையம், உணவகம், காத்திருப்பு அறை கட்டப்பட்டு உள்ளன. இந்த கடைகளின் மேல்தளத்தில் 137 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 200 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.