ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது


ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது
x

குடியாத்தத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சா்வேயர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சா்வேயர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

நிலம் அளவீடு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் டி.பி.பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் வேலு (வயது 65), விவசாயி.

இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து அதற்கான வரைபடம் வேண்டும் என குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்காக அவர் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு பலமுறை வந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து சர்வே பிரிவினர் சில மாதங்களுக்கு முன்பு வேலுவின் நிலத்தை அளவீடு செய்தனர். பின்னர் நிலத்திற்கு சம்பந்தமான புல வரைபடம் கேட்டு குடியாத்தம் தாலுகா சர்வேயரை அணுகி உள்ளார்.

சர்வேயர் விஜய்கிருஷ்ணா (48) என்பவர் நிலத்தின் புல வரைபடம் வழங்க ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பல மாதங்கள் அலைக்கழிக்கப்பட்டு தற்போது லஞ்சம் கேட்டதால், பணம் கொடுக்க விரும்பாத வேலு இதுகுறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

சர்வேயர், உதவியாளர் கைது

இதனைத்தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் உள்ளிட்ட போலீசார் வேலுவிடம் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்தனர்.

இதனை அவர் இன்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வேயர் அறைக்குச் சென்று சர்வேயர் விஜய்கிருஷ்ணாவிடம் கொடுத்தார். அப்போது விஜய்கிருஷ்ணா, அவருடைய உதவியாளர் கலைவாணன் (27) என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து வேலு கலைவாணனிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்துள்ளார் அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயர் விஜய்கிருஷ்ணா, அவருடைய உதவியாளர் கலைவாணன் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் கலைவாணனிடம் ரூ.20 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

கைது செய்யப்பட்ட விஜய்கிருஷ்ணா பள்ளிகொண்டா சாவடியை பகுதியைச் சேர்ந்தவர். இவர் 2017-ம் ஆண்டு முதல் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் சர்வே பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று தாலுகா சர்வேராக பணியாற்றி வந்தார். இவர் பணத்தை நேரடியாக வாங்குவது இல்லை. ஆம்பூர் வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த கலைவாணன் என்ற உதவியாளர் மூலமாக பணம் வாங்கி வந்தது தெரிய வந்தது.

இதனிடையே குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரை கைது செய்த தகவல் காட்டு தீ போல் பரவியது.

இதனையடுத்து குடியாத்தம் நகரில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story