பா.ஜ.க.வுடனான உறவை முடித்து கொள்கிறேன்
பா.ஜ.க.வுடனான உறவை முடித்து கொள்வதாக திருச்சி சூர்யா சிவா டுவிட்டர் பதிவில் திடீரென அறிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் இணைந்த சூர்யாசிவா
தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா சிவா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். இவர், பா.ஜ.க.வில் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும், தி.மு.க.வை விமர்சித்தும் பல்வேறு கருத்துகளை கூறி வந்தார். சூர்யா சிவாவை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் ஒரு வழக்கில் கைது செய்ய முயன்றபோது, அவருக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவமும் நடந்தது. பா.ஜ.க.வில் இணைந்த சில காலத்திலேயே அவர் கட்சியில் வேகமாக வளர்ந்து வந்தார்.
சமூக வலைதளத்தில் பரவிய ஆடியோ
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. சிறுபான்மைபிரிவு மாநில தலைவர் டெய்சியுடன் சூர்யா சிவா செல்போனில் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து திருப்பூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, இனி சுமுகமாக தொடருவோம் என்று அறிவித்தனர். இதையடுத்து கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி, சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்துக்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை கடந்த மாதம் 24-ந் தேதி அறிவித்தார்.
உறவை முடித்து கொள்கிறேன்
இந்தநிலையில் பா.ஜ.க.வுடனான உறவை இத்துடன் முடித்து கொள்வதாக சூர்யாசிவா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், "அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பா.ஜ.க.விற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.க. இரட்டை இலக்கத்தை அடையும்.அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பா.ஜ.க.வை போலவே தமிழகத்தில் பா.ஜ.க. நீடிக்கும். இத்துடன் என் பா.ஜ.க. உடனான உறவை நான் முடித்து கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி" என பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சூர்யாசிவாவிடம் விளக்கம் பெற முயன்றபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.