விஷம் குடித்து தம்பதி தற்கொலை


திருப்பூர்


திருப்பூர் அருகே நோய் பாதிப்பு காரணமாக தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடல்நிலை பாதிப்பு

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் எஸ்.எஸ். நகரைச்சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). தச்சுத்தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி வசந்தா (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வசந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தினந்தோறும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு காரணமாக மருத்துவரை அணுகியுள்ளனர். அப்போது வீட்டிலேயே இருந்து மாத்திரையை சாப்பிட்டு வருமாறு மருத்துவர் அறிவுரை கூறியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த கணவன்-மனைவி இருவரும் கடந்த வாரம் வசந்தாவின் தாயார் செல்லம்மாளிடம் தங்களுக்கு வாழப்பிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

தம்பதி விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை அவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சென்று ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து இருவரின் உடல்களையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக 2 பேரும் விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story