பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
திருப்பூர்


தேர்வில் மதிப்பெண் மிக குறைவாக வரும் என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-1 மாணவி

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 46). இவர் திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் சின்னியகவுண்டன் புதூர் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி முத்து லட்சுமி (41). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இவர்கள் கடந்த 17 வருடங்களாக ஆண்டிபாளையம் சின்னியகவுண்டன் புதூரில் வசித்து வருகின்றனர்.

2-வது மகள் அர்ச்சனா (16) முருகம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பயிற்சி தேர்வு எழுதியுள்ளார். இதிலும் மதிப்பெண் குறைவாக வரும் என்று தனது குடும்பத்தாரிடம் கூறி மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை தனது அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டு அர்ச்சனா பள்ளிக்குச் செல்லவில்லை. காலை 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதியம் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சென்ட்ரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அர்ச்சனாவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story